தலைப்பைத்தேடி...


தலைப்பைத்தேடி...


பதினெட்டு... பத்தொன்பது.. இருபது.. அப்பா!! அப்பப்பா!! தினமும் எண்ணிக்கொண்டே இந்த இருபது படிகளை ஏறி இறங்குவது கௌரி மாமிக்கு வாடிக்கை. 20ஆவது படியை அவள் பாதங்கள் தொட்ட மறுகணமே அனிச்சையாக அவள் இதயத்துடிப்பு இலகுவாகும். படிகளின் ஓரம் உள்ள சற்று ஆடிக்கொண்டிருக்கும் கைப்பிடியை சந்தேகத்தோடு பிடித்தவாறு இருபத்தோராம் படியில் உள்ள திட்டு போன்ற இடத்தில் தனது பெரிய கைப்பையை வைக்கிறாள். அந்த மூட்டையின் எடை ஒரு பத்து கிலோ இருக்கும். ஒரு கையில் கைப்பிடியைப் பிடித்தவாறு மறு கைகளால் தன் புடவை ஓரத்தால் முகத்தை துடைத்துக் கொண்டே திட்டில் அமர்கிறாள். என்ன மாமி! இன்னைக்காவது வெல்ல சீடை செஞ்சு கொண்டு வந்தியா? என்று பதில் தெரிந்துகொண்டே கேள்வி கேட்டான் ரங்கராஜன். அவனும் கௌரி மாமியைப் போல் ஒரு வியாபாரி. ஆனால் கௌரி மாமியைவிட கொஞ்சம் பெரிய இடம். 25 ஆம் படி. கௌரி மாமிக்கு சாம்பார் பொடி, ரசப்பொடி, தக்காளி தொக்கு, புளி தொக்கு ஆகியன கை வந்த கலை. வெள்ளிக்கிழமைகளில் மோர்க்குழம்பும் செய்து கொண்டு வருவாள். சில மணி நேரங்களிலேயே  விற்றுத் தீர்ந்துவிடும். ரங்கராஜனின் வேலை அன்றைக்கு அவனது அம்மா கொடுத்து அனுப்பும் 50 பாட்டில் நார்த்தங்காய் ஊறுகாயை விற்றுத் தீர்ப்பதுதான்.
இல்லடா ரங்கா. நேக்கு மோர்க்குழம்பு பண்ணவே இன்னைக்கு நேரம் போதலை. அம்பியும் காலங்காத்தாலயே மடத்துக்கு போனவன், வரவே இல்ல.  கண்டிப்பா நாளைக்குப் பண்ணிக் கொண்டு வரேன். என்னவோ போ மாமி என்று சிலாகித்துக் கொண்டே, வழக்கம் போல் தனக்கும் கௌரி மாமிக்கும் காப்பி வாங்க பிளாஸ்கில் ஒட்டியிருந்த நீர்த்துளிகளை உதறிய வாரே ஒன்றாம் படி நோக்கி இறங்கினான்.  கௌரி மாமியே வாயடைத்துப் போகும் படி காபி போடுவாள் ராஜம். ரங்கராஜனுக்கு ராஜத்தின் காப்பி ரொம்ப பிடிக்கும். அதைவிட ராஜத்தையும் ரொம்ப பிடிக்கும். ராஜத்தின் கணவன் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தன் தெருவில் புதிதாகக் கட்டப்பட்டு இருந்த மூன்று மாடி வீட்டின் எலக்ட்ரிக்கல் வேலை செய்தபோது கரண்ட் ஷாக் அடித்து இறந்து போனான். குழந்தைகள் மட்டும் இருந்திருந்தால் அவள் எப்படி வாழ்க்கையை ஓட்டி இருப்பாள் என்று அவளுக்கே தெரியாது.
தினமும் காப்பி வாங்கும்போது ராஜத்தின் முகத்தில் எப்படியாவது சிரிப்பை வரவழைக்க வேண்டும் என்று எத்தனிப்பான் ரங்கராஜன். அன்றும் அவள் முகம் கடுகடுவென இருந்தது. ராஜம் 28 வயதுதான் ஆகிறது. பொதுவாக துடிப்பானவள். புத்திசாலி.  ராஜம் கடைசியாகச் சிரித்தது இரண்டு மாதங்களுக்கு முன் ரங்கராஜன் சொன்ன சாரதி டேச்சு வின் ஜோக்கிர்க்காக. சிரித்துக் கொண்டிருக்கும் போதுதான் அந்த கனமான தொலைபேசி அழைப்பு வந்தது.
எப்படியும் மதியம் காபி வாங்க வரும்போது மீண்டும் முயற்சிக்கலாம் எதிர்பார்ப்போடு, ராஜம் காபி  ஊற்றிக் கொடுத்த பிளாஸ்கையும் 2 பேப்பர் கப்பையும் கையில் எடுத்துக்கொண்டு கௌரி மாமியை நோக்கி வேகமாக ஏறினான். அப்போது டிக்கெட் கவுண்டரில் வேலை செய்யும் கௌசல்யா ராஜத்தை பார்த்துச் சிரித்துக்கொண்டே படி ஏறினாள். கௌசல்யாவுக்கும் கௌரிக்கும் ஆகவே ஆகாது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக் கூட மாட்டார்கள்.   திட்டில் அமர்ந்துகொண்டு பிளாஸ்கில் இருக்கும் காப்பியை மாமிக்கு அரை கப் ஊற்றிக் கொடுத்தான் ரங்கராஜன். தனக்கு ஒரு கப் ஊற்றிக் கொண்டான். காபி குடித்தவாறே மெதுவாக மாமியிடம் ஆரம்பித்தான். மாமி! நீ எப்ப தான் ராஜத்துகிட்ட கிட்ட பேச போற? நானும் எவ்வளவு நாள்தான் காத்திட்டு இருக்கிறது? ரங்கராஜனுக்கு ராஜத்துக்கு என்று எப்போதும் துடித்துக் கொண்டிருப்பான். அவனில் பாதி அவள் என்று கூட அவ்வப்போது நினைப்பான், பெயரளவில்.
கொஞ்சம் பொறுடா ரங்கா.. ராஜம் எங்க போக போறா? கொஞ்ச நாள் ஆகட்டும். அவளா சரியாகிடுவா என்றவாறு ஸ்டேஷன் மாஸ்டருக்கு மோர்க்குழம்பு பாக்கெட் கொடுத்து பத்து ரூபாய் வாங்கிக் கொண்டாள் கௌரி. ரங்கராஜனும் தன் வேலையைப் பார்க்க 25ஆம் படிக்குச் சென்றான். 
அன்று வெள்ளிக்கிழமை. கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அதனால் டிக்கெட் கவுண்டரில் உள்ளவர்கள் எக்ஸ்ட்ரா காபி குடிப்பது வாடிக்கை. பதினோரு மணி காபி கொடுக்க  ராஜம் தன்னிடம் இருந்த ஒரே இரும்பு காப்பிக் கூண்டோடு படியேற ஆரம்பித்தாள்.  இரண்டு மாதங்களாக அவளுக்கும் அந்த ஆடிக்கொண்டிருக்கும் கைப்பிடி தேவைப்படுகிறது. இருவரிடம் வியாபாரம் செய்து கொண்டிருந்ததால், ராஜம் ஏறியதை கௌரி மாமி கவனிக்கவில்லை. ராஜம் வருவதைப் பார்த்து, டிக்கெட் கவுண்டரில் கதவைத் திறக்கச் சொல்கிறாள் காலை ஷிஃப்டில் இருக்கும் கௌசல்யா. ராஜம் கௌசல்யா விடம் மட்டும் நெருங்கிப் பழகுவாள். கௌசல்யா காபி குடித்து முடிக்கும் வரை, ஒரு பத்து நிமிடம் இருவரும் பேசிக் கொண்டிருப்பார்கள். ராஜத்துக்கு கௌசல்யா என்றால்  ஒரு இன்ஸ்பிரேஷன். கௌசல்யா என்ன சொன்னாலும் செய்வாள் ராஜம்.  டிக்கெட் கவுண்டரில் காபி கொடுத்துவிட்டு வரும் வழியில் ரங்கராஜன் கூப்பிட்டும் நிற்காமல், இருபதாம் படி ஓரத்தில் கௌரி மாமி தண்ணீர் ஊற்றி அலசி வைத்திருந்த ஃபிளாஸ்கை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினாள். 
ராஜம்! ஃப்ளாஸ்க்க  ரங்கா கொண்டு வந்து கொடுத்திருப்பானேடி! இதுக்காக நீ ஏண்டி படியேறி வர?  என்றாள். இல்லம்மா, இப்பதான் கவுண்டருக்கு டீ கொடுத்துட்டு போறா என்று கௌரி மாமிக்கு கேட்கும்படி சத்தமாக கூறினான் ரங்கராஜன். சென்ற ஐந்து நிமிடத்திலேயே சர்க்கரை சற்று தூக்கலாக 2 ஸ்டிராங் காபி போட்டு பிளாஸ்கில் ஊற்றி கையில் பிடித்துக்கொண்டு மற்றொரு கையில் தான் கொண்டு வந்து இருந்த மஞ்சள் பையையும் எடுத்துக் கொண்டு மேலே ஏறினாள். இரண்டு கையிலும் பொருள் இருந்ததால் அவளுக்கு கைப்பிடியைப் பிடிக்க தோன்றவில்லை. 20-ஆம் படியில் பிளாஸ்கை வைத்து விட்டு, கௌரி அருகே அமர்ந்தாள். 
என்னடி! மஞ்சப் பையில ஏதோ பேப்பர் இருக்கிற மாதிரி இருக்கு? பேங்க் பேப்பர் எதுவும் நான் படிச்சு சொல்லனுமா? என்ற எதிர்பார்ப்போடு கேட்டால் கௌரி.  பையிலிருந்த ஒருபக்கம் சாம்பல் நிறமும் மறுபக்கம் மஞ்சள் நிறமும் கொண்ட தாளை எடுத்து கௌரி இடம் நீட்டினாள். கௌரியால் அந்த நிறத்தை வைத்தே யூகிக்க முடிந்தது, அது ஒரு திருமண பத்திரிக்கை என்று. ரங்கராஜனின் இதை மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான். கௌரி பத்திரிக்கையைப் படித்துப் பார்த்தாள். ராஜத்தின் நெற்றியில் முத்தமிட்டாள். நல்லா இரு!  நல்லா இரு! என்று அழுத்திக் கூறினாள் கௌரி. உடனே அந்த இடத்தை விட்டு மேலே பார்க்காமல் கீழ்நோக்கி வேகமாக இறங்கினாள் ராஜம்.  தானும் ராஜம் வயது இருக்கும்பொழுது தன் வாழ்க்கையைப் பற்றி சற்று யோசித்து இருந்தால் இருபது ஆண்டுகள் கழித்து இந்தக்கண்ணீர் சிந்தி இருக்க வேண்டாம் என்று மனதுள் நினைத்தாள் கௌரி. கௌரிக்கு மட்டும்தான் தெரியும், அந்தக் கண்ணீர் அவளுக்காக அவளே சிந்துவது என்று. வழக்கம்போல் கண்ணீர் துடைக்க தனது புடவை தலைப்பைத்தேடி அவள் கை  அனிச்சையாக சென்றது.

Comments

  1. அருமையான கதை. எடுத்தாண்ட விதமும் மிகச் சிறப்பு. திருச்சி மண்ணும், சுஜாதாவின் பாணியும் ஆங்காங்கே மணம் வீசியது. பிறர்க்காக தமது சோகங்களை வெளிக்காட்டாது, தன்னுள்ளேயே புதைத்து வாழும் மனிதர்களே ஆகச் சிறந்தவர்கள்! கதையின் முடிவில் நனைந்தது கௌரியின் சேலைத் தலைப்பு மட்டுமல்ல வாசகர்களின் மனமும் தான் தொடர்ந்து எழுதுங்கள். வாசிக்கக் காத்திருக்கிறோம். முதல் முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. தலைப்பில் தலைப்பை வைத்ததே அருமை. எழுதும் பாணியும், சிந்தனை சிதறாமல் உணர்வை வெளிப்படுத்தும் விதமும் அருமை.

    ReplyDelete
  3. கிட்டத்தட்ட யுகசந்தியில் வரும் கௌரி பாட்டியை நினைவு படுத்தி விட்டீர். அந்த பாட்டிக்கும், இவருக்கும் பெரிய மாற்றம் இல்லை. அருமையான நடை. கௌசல்யாவின் ரோல், பிடிபடவில்லை. முடிவை பெரிதளவில் விவரிக்காமல், ரங்கராஜன் போல் புரிந்து கொள்ளட்டும் என்பது ஒரு வகை எழுத்தாளர்களின் டெக்னீக். தலைப்பை தேடி என்ற தலைப்பு, நீங்கள் இதுவரை தலைப்பை எழுத்துப்பட்டறையின் கதைக்காக தேடினீர்கள் என்று கொள்வதா, இல்லை கௌரி பாட்டியின் தலைப்பை, என்று கொள்வதா!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கசிந்துருகி...

மசாலா கதை

வாசக நாய்கள்