மசாலா கதை
மசாலா கதை
இடது கையில் ஏற்பட்ட வெட்டுக் காயத்திலிருந்து ரத்தத் துளிகள் சொட்டு சொட்டாக கீழே விழுந்தன. அதை கவனித்த மறுகணமே டக்கென்று அந்த ஆள் காட்டி விரலை வாயில் வைத்து சுவைக்கத் தொடங்கினாள் வர்ஷா. அப்போதுதான் வலியின் வீரியமும் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய தொடங்கியது. தலையை சற்று அண்ணாந்து பார்க்க முயற்சி செய்தாள். மேலே உள்ள மரப்பலகை இடித்தது, எனவே அந்த முயற்சியை கைவிட்டாள். சுற்றி முற்றி பார்த்தாள். முற்றிலும் இருட்டாக இல்லை. இடுக்குகளிலிருந்து வெளிச்சத்தின் ஒளி ஆங்கங்கே தெரிந்தது. தன் கைகளையும் கால்களையும் அசைத்து எதையும் தட்டிவிட்டு விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார் வர்ஷா. இருப்பினும் சில நிமிடங்கள் கூட அவளால் ஒரே தோரணையில் கால்களையும் கைகளையும் குறுக்கி தலை சற்று குனிந்தவாறு அமர முடியவில்லை. அவன் வந்து விடுவானோ? தன் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து விடுவானோ? என்ற பயம் அவளை மேலும் ஆட்கொண்டது. நெற்றியும் கைகளும் வியர்க்கத் தொடங்கியது. தன் இருதயத்துடிப்பு அசாதாரணமாக இருப்பதை உணர்கிறாள். இரண்டு உயிர்களின் மரண ஓலம் கேட்கிறது. சற்று நிதானித்து அமைதியாகவே இருக்கிறாள் வர்ஷா. திடீரென அவன் நடந்து வரும் சத்தம் கேட்கிறது.
"அந்த அங்கிள் தான் நடந்து வராரு. மம்மி டாடி கூட சண்டை போட்டு, மம்மி டாடி வேற கத்தினாங்க. அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே? இப்ப நம்ப போனா, நம்மளையும் அந்த அங்கு ஏதாவது பண்ணிடுவாங்க. பேசாம இங்கேயே இருப்போம்" என்று தன்னையே ஆற்றுப்படுத்தி கொண்டு, வாயிலிருந்து விரலை எடுத்து உற்றுப் பார்த்தாள். கையிலிருந்த காயம் சரியாக தெரியவில்லை. இடுக்குகளில் பாய்ந்த ஒளி வீசிய வெளிச்சத்தின் அருகில் விரலை கொண்டு சென்று நீட்டி பார்த்தாள். கையிலிருந்த காயம் தன் வாயை நீரினால் மிகவும் ஊறிப்போய் இருந்தது. மீண்டும் கையை வாய்க்குள் வைத்துக் கொண்டாள்.
இன்னும் ரொம்ப நேரம் எங்கே இருக்கிறது கொஞ்சம் டேஞ்சர் தான். சீக்கிரமா கெளம்பனும். கதவு வேற தொறந்து இருக்கு. இந்த பொடிசு எங்க போச்சு? கண்டிப்பா வீட்டை விட்டு வெளியே போய் இருக்காது. இங்கதான் எங்கயாவது ஒளிஞ்சிட்டு இருக்கும். போய் அமைதியாக தேடுவோம்.
அவன் இரண்டாவது அறையில் சென்று வெடுக்கென்று தரையில் குனிந்து கட்டிலுக்கு அடியில் பார்த்தான். யாரும் இல்லை. எழுந்து அந்த அறையில் இருந்த துணிகள் வைக்கும் சிறு அறையின் கதவுகளை மெதுவாக திறந்தான். வலது பக்கமும் இடது பக்கமும் தலையை திருப்பி திருப்பி இரண்டு முறை பார்த்தான். யாரும் இல்லை என்ற ஆச்சரியம். உறுதியாக அவள் அங்கு தான் இருப்பாள் என்று அவன் நினைத்திருந்தான்.
அறையை விட்டு வெளியே வந்து நேராக சோபாவிற்கு பின்புறம் பார்த்தான். அங்கும் யாருமில்லை. அப்போதுதான் அவனது வலது கையில் இருந்து வெட்டுக்காயம் நினைவுக்கு வருகிறது. அதை டக்கென்று வாயில் வைத்து சொட்டும் ரத்தத்தை சுவைத்தான்.
கட்டை விரலுக்கு அருகில் இருந்த மல்டி பர்ப்பஸ் கிளீனர் பாட்டில் காலில் பட்டு விழுந்தது. வர்ஷா பதறிப்போனாள். அந்த ஒரு வினாடி நீடித்த சத்தத்தினால் தன் உயிரை போய்விடுமோ என்ற பயத்தை உணர்ந்தாள். அவனும் வாயில் வைத்த விரலோடு வேகமாக சமையலறைக்குள் நுழைந்தான். மேலே உள்ள ஷெல்ப்களிள் அவள் இருக்க மாட்டாள் என்பது நன்றாகவே தெரியும். இருந்தாலும் வேக வேகமாக திறந்து பார்த்தான். முழுவதும் மசாலா பொடிகள். ஒரு செல்பில் ஐந்தரை பெட்டியையும் பார்த்தான். உடனே அதைத் திறந்து, நட்ட நடுவில் இருந்த மஞ்சள் பொடியை எடுத்து தன் விரலிலிருந்த வெட்டுக் காயத்தில் வைத்தான்.
தன் தேடல் முற்றுப்பெற, மற்ற அறைகளையும் திறந்து பார்த்தான். அனைத்து அறைகளிலும் மளிகைப் பொருட்களும் மசாலாப் பொருட்களும் பாத்திரங்களும் மட்டுமே. இறுதியாக சின்க்குக்கு கீழே உள்ள அறையை திறந்தான். அம்மாமாமா.....! என கத்தினாள் வர்ஷா. வேகமாக தோராயமாக கையை விட்டதில் சிக்கினால் வர்ஷா. அவளை தரதரவென இழுத்து வெளியே போட்டான். மிகவும் பதறிப் போனாள். கைகள் நடுங்கின. உடம்பு நடுங்கியது. இருப்பினும் பேசினாள். அங்கிள்! என்ன ஆச்சு அம்மாவுக்கும் அப்பாவுக்கும். என்று கேட்டாள்.
எதிர்வீட்டு சர்வேஷ் அங்கிள் என்றாள் வர்ஷாவுக்கு ரொம்ப இஷ்டம். வீக்கெண்ட் மாலை வேளைகளில் அம்மா செய்யும் வெங்காய பஜ்ஜி மற்றும் போண்டாவை சர்வேஷ் அங்கிளுக்கு கொண்டு போய் கொடுப்பதே வர்ஷாவின் வேலை. அதனால் எப்போதும் சர்வேஷ் அங்கிள் நல்ல பரிட்சயமான ஒருவர் தான்.
பொறுமையாக முக பாவனையை மாற்றி சர்வேஷ், "உங்க அப்பா சாமிகிட்ட போய்ட்டார். உங்க அம்மாவும் கூடவே போய்ட்டாங்க...." என்று கூறினான். திறந்த கரம் மசாலா பொடி டப்பா ஒரு கையிலும் அதனுடைய ஸ்பூன் மறு கையிலும் பிடித்திருந்த நிலையில் சிலை போல் அடுப்பு முன் நின்று கொண்டிருந்த என் அம்மா, டக்கென்று இரண்டையும் கீழே போட்டு சுருண்டு விழுந்துட்டாங்க. சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பா, "என்னமா! இவளோ கஷ்டபடுரியே.." என புலம்பிகிட்டே அம்மாவ தூக்கி சுவர ஓரமா உக்கார வைச்சாங்க..
அம்மாவுக்கு இப்படி அடிக்கடி ஆகும். அப்பா "overthink பண்ணாத.. பண்ணாத..!"-ண்ணு எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டாங்க.. என்ன பண்றது. சில நேரம் அவங்கள அவங்களே மறந்து இப்படி எதாவது நடந்திடுது. நந்துவுக்கு எல்லாம் விவரமாக புரிகிறது.. இவ்வளவு நாள் நம்பவில்லை.. மேலும், இவ்வளவு விவரங்களும் தெரியவில்லை. வர்ஷா இவ்வளவு சிறிய வயதில் அனைத்தையும் கவனித்து, தெளிவாக விளக்கும் அளவுக்கு விவரமாக இருப்பதை எண்ணி மகிழ்வதா அல்லது வர்ஷவின் நிலைய நினைத்து வருந்துவதா என்றே தெரியாமல் சமையலை தொடர்ந்தாள் பிந்து. "சரி சித்தி.. நா போய் ஹோம் வொர்க் பண்ணனும்" என்று கூறி, சமையல் மேடையில் இருந்து கீழே குதித்து ஓடினாள் வர்ஷா.
"பிந்தூ.. டைம் ஆச்சு.. விசிட்டர் டைம் முடிஞ்சிடும்.. சமையல் ஆச்சா..?" என்று பெட் ரூமில் இருந்து கத்தினான் சர்வேஷ். "இன்னும் 10 மினிட்ஸ்-ங்க.. முடிஞ்சிறுச்சி" என்று சொல்லிக்கொண்டே அடுத்த 47A பஸ் எப்போது என்று மொபைல் ஆப்பில் தேடினாள் பிந்து.

Comments
Post a Comment