கசிந்துருகி...


 

கசிந்துருகி...


இடதுகையால் ஸ்டீயரிங் வீலை ஒருபக்கமாக வளைத்துக் கொண்டே, வலதுகையால் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்த ரஷ்ய மொழி பாடலின் ஒலி அளவை சன்னமாக குறைத்து, பிரேக்கில் இதமாக காலை வைத்து அழுத்தினான் ஆண்ட்ரியா. பாட்டிலில் இருந்த சுடுநீரை அனிச்சையாக ஒருமுறை குடித்து வைத்தான். பின்னர்,  வண்டியை விட்டு இறங்கி வழக்கம் போல், சர்ச் வாசலருகே ஓரமாக நின்றான். தனது சிறு வயதில் இருந்தே, தன் தந்தை சொல்லிக்கொடுத்த பழக்கம் அது. மார்ட்டின் அந்தச் சர்ச்சில் தான் பணிபுரிந்தார். இறக்கும் முன், தன் தந்தை தன்னிடம் சொன்ன ஒரே வேலையை ஒரு கணம் நினைத்துக் கொண்டான். தனக்கே உரிய பாணியில் கடவுளை வேண்டிய பிறகு, எதார்த்தமாக சுற்றி முற்றி பார்த்தான் ஆண்ட்ரியா.  தோளில் இருந்த துப்பாக்கியை சரி செய்துகொண்டு, காரை ஓட்ட தொடங்கினான். 

முழு இருளும் அல்லாத முழு ஒளியும் அல்லாத, அந்த ஸ்வால்பார்ட் தனித்துவத்தை வழக்கம்போல் ரசித்தபடியே மெதுவாக வாகனத்தை செலுத்தினான் ஆண்ட்ரியா. சாலையில் வேறு எந்த வாகனங்களும் இல்லை. தூரத்தில் ஓரிரண்டு பனிக்கரடிகள் மட்டும் அமர்ந்திருந்தன. ஜோனாஸ் தனது நான்கு நாய்களையும் கயிறுகளில் பூட்டி, சாலையோரமாக ஓட்டிச் சென்றுகொண்டிருந்தான். காரின் கண்ணாடியை கீழே இறக்கி "ஜோனாஸ்.. ஹேவ் ஃபன் மேன்!" என்று கையசைத்து, ஒரு விசில் அடித்து, கண்ணாடியை மேலே எழுப்பினான்.  5 நிமிடம் கழித்து அந்த நீல நிற வாகனம் தூரத்தில் மெதுவாக சென்றது கண்ணில் தென்பட்டது. அது வலது பக்கமாக திரும்பி ஆர்டிக் கோடு வால்ட் இருக்கும் சுரங்கத்தை நோக்கி மெதுவாக பயணித்தது. " இந்த நேரத்தில் இந்த இடத்திற்கு போறது யாராக இருக்கும்!?" என்று தனக்குள்ளே கேள்வி எழுப்பி, தலையை சொரிந்து கொண்டே வண்டியின் வேகத்தை குறைத்து இடது பக்கமாக திரும்பினான் அண்ட்ரியா. 


தனது அலுவலகத்தின் வாசல் வந்தவுடன் வண்டியை நிறுத்தி, மீண்டும் பாட்டிலில் இருந்த சுடுநீரை அனிச்சையாக குடித்தான். காரின் வலது பக்க இருக்கையில் கிடத்தப்பட்டிருந்த சாவிக்கொத்தை எடுத்து ஜாக்கெட்டில் வைத்துக் கொண்டான். கதவை வேகமாக திறந்து, வாசலை நோக்கி உற்சாகமாக நடந்தான். தன்னுடைய வேலை உலகத்திலேயே யாருக்குமே வாய்க்காத ஒரு உன்னதமான வேலை என்று ஒவ்வொரு நாளும் எண்ணிக் கொண்டே இருந்தான் ஆண்ட்ரியா. கதவருகில் சென்றபோது வழக்கம்போல் தலையை நன்றாக மேலே தூக்கி வானத்தில் ஏதேனும் நட்சத்திரங்கள் தென்படுகிறதா என்று பார்த்தான். எதார்த்தமாக ஜாக்கெட் பைக்குள் கையை விட்டு சாவி எடுத்தவாறு,  கதவு பூட்டின் மேல் பார்வை பட்டது. "என்ன!? பூட்டின் துளை தெரிகிறது??!!" என்று ஆச்சரியப்பட்டான். வழக்கமாக, பூட்டின் துளை உறைந்த பனியால் மூடப்பட்டிருக்கும். ஆண்ட்ரியா தனது கிளவுஸ் அணிந்த கைகளால், அதனைத் தட்டி நீக்கிய பின்னரே பூட்டின் துளை தெரியும். இப்போது ஆண்ட்ரியாவின் நாடித்துடிப்பு அதிகமானது. மனதில் இருந்த சந்தேகத்தை உறுதிப்படுத்த சாவியை விடாமலே, கதவை அவசரமாக திறந்தான். கதவும் திறந்தது! 


ஒரு நொடியும் தாமதிக்காமல் வேகமாக நடக்க ஆரம்பித்தான். அந்த சுரங்கப் பாதையின் சுவர்கள் அனைத்திலும் உறைபனி ஒட்டியிருந்தது. ஆண்ட்ரியா தற்போது ஓட ஆரம்பித்தான். மூச்சு வாங்க இரண்டாவது கதவை  அடைந்து, அதையும் அவசரமாக திறந்து பார்த்தான். அந்தக் கதவும் திறந்தது. " யாரோ உள்ளே நுழைந்து இருக்கிறார்கள்!" என்று அவனுக்குள்ளே சொல்லிக்கொண்டு, தோளில் மாட்டியிருந்த துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். சுற்றி முற்றி எல்லா இடங்களிலும் பார்த்துக்கொண்டே, வேகமாக துப்பாக்கியையும் முன்பக்கம் நீட்டியவாறு, ஓடுவதும் நடப்பதுமாக, கம்பிக்  கதவுகளை நோக்கி சென்றான். "உலகத்தில இருக்கிற கோடிக்கணக்கான விதைகளை ஒட்டுமொத்தமா கஷ்டப்பட்டு சேர்த்து வெச்சிருக்க இந்த இடத்தில யாரோ ஊடுருவி இருக்கிறாங்க!" என்று மனதில் ஓடிக்கொண்டிருந்தது. கம்பிக் கதவுகள் திறக்கப்படவில்லை. கதவருகே இருந்த ஸ்க்ரீனில் 97DK37WC62QL80JC என்ற கடவுச்சொல்லை வேகமாக தட்டினான். அந்த 16 அடி உயரமான கம்பிவலை பதிக்கப்பட்ட கதவுகள் மெல்ல வலது பக்கமாக நகர்ந்தன. உள்ளே நுழைந்து வேகமாக ஒவ்வொரு வரிசையாக ஓடினான். அங்கங்கே கைகளைப் பதித்து பெட்டிகள் இருப்பதை உறுதி செய்தான். எப்போதும் இருக்கும் இடத்தில், எந்த மாற்றமும் இல்லாமல், எல்லாப்  பெட்டிகளும் இருந்தன. 


திடீரென்று நினைவுக்கு வர, மூன்றாவது வரிசையில் இருந்த பெரு நாட்டு பெட்டியை ஓடிச்சென்று திறந்தான். இருந்த நூற்றுக்கணக்கான சிறிய டெஸ்ட் டியூப் வடிவிலான கண்ணாடி குடுவைகளில், சிவப்பு நிற லேபிள் ஒட்டப்பட்ட லீமா அவரை மற்றும் கிர்ணி பழ விதைகள் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டான். பின்னர் பெட்டியை மூடியபடி அவசர அவசரமாக கம்பி கதவருகே வந்து ஸ்க்ரீனில் கதவை மூடுவதற்கான கடவுச்சொல்லை வேகமாக தட்டினான். கதவு சட்டென்று வேகமாக மூடியது. தனது துப்பாக்கியை சரி செய்தவாறு, வேகமாக ஓடத் தொடங்கினான். அப்போது அந்த நீல நிற கார் நினைவுக்கு வந்தது. வேகமாக இரண்டாவது கதவைக் கடந்து, வாசல் நோக்கி ஓடி கதவைத் திறந்தான். 

ஒரு நான்கு போலீஸ் கார்கள், சைரன் விளக்குகள் சுற்ற,  சாலையோர பனியை பீய்ச்சுத் தள்ளியவாறு வந்து நின்றன. ஆண்ட்ரியா மனதில் ஒரே கலக்கம், என்ன நடக்கிறது என்று யூகிக்க முடியவில்லை. அதே கணத்தில், காரைவிட்டு இறங்கி வேகமாக ஓடிவந்த நான்கு காவலர்களில்,  இருவர் ஆண்ட்ரியாவின் கைகளை பின் பக்கமாக கோர்த்து இறுகப் பிடித்தனர். மேலும் இருவர் தனது முழங்கால்களால் ஆண்ட்ரியாவின் பின்னங்கால்களில் இடித்து, தரையில் விழச் செய்தனர். "என்னை விடுங்கள்! என்னை விடுங்கள்! நான்தான் இந்த விதை வங்கியின் காவலன்! என்னை ஏன் பிடிக்கிறீர்கள்!? நான்தான் இந்த வங்கியின் காவலன்!" என்று மீண்டும் மீண்டும் கத்தினான். "ஓ! நீதான் காவலனா!!?? எங்கே உன் அடையாள அட்டை?" என்றவாறு, ஆண்ட்ரியாவின் பேண்ட் பாக்கெட்டில் கையைவிட்டு துளாவினான் அந்த போலீஸ். அடையாள அட்டையை எடுத்து பார்த்தால், "ஆமாம் இவன்தான் இந்த வங்கியின் காவலன் . இவனை விடுங்கள்!" என்று மற்றவர்களிடம் கூறி, ஆண்ட்ரியாவை விடுவித்தான். 


ஆர்டிக் கோடு வால்ட் அருகே நின்ற நீல நிற காரை சுற்றி நான்கு போலீஸ்கார்களும், சைரன் விளக்குகள் சுற்றியபடி நின்று கொண்டிருந்தன. " அங்கே என்ன நடக்கிறது!" என்று போலீஸ்காரர்களை பார்த்து கேட்டான். " சில தீவிரவாதிகள், அரிதான விதைகளைத் திருடவும்,   கோடு வால்டில் உள்ள ஆவணங்களை அளிக்கவும் திட்டமிட்டது தெரியவந்தது" என்றார்கள். அப்போது கோடு வால்டில் இருந்து ஒருவனை விலங்கிட்டு இழுத்து, காரில் ஏற்றுவது தெரிகிறது. அந்த நீல நிற காரைத்  தவிர மற்ற போலீஸ்கார்கள் அனைத்தும் மெதுவாக கிளம்புகின்றன. அவை ஊர்வலம் போல் மெதுவாக வர, விதை வங்கியை கடக்கும்போது ஆண்ட்ரியாவுக்கு பேரதிர்ச்சி. "அவன்தான் ஆஸ்கர் மார்ட்டின். இந்த நகர் தான். பல மாதங்களாக தீவிரவாதிகளின் தொடர்போடு இந்த சதித் திட்டத்திற்கு உடந்தையாக இருந்திருக்கிறான்" என்று அந்த போலீஸ்காரர் ஆண்ட்ரியாவிடம் கூறுகிறார். உடனே வேகமாக தன் சாவிக்கொத்தை எடுத்து உற்றுப் பார்க்கிறான். பின்னர், கைவிரல்களால் தடவிப் பார்க்கிறான்.  அதில் உருகி கசிந்த மெழுகு போன்ற களிம்பு ஒட்டியிருந்தது. " ஓ மை காட்!" என்று முழங்காலிட்டு, தலையை தரையில் இடித்துக்கொண்டு கசிந்துருகினான் ஆண்ட்ரியா மார்ட்டின். 


 

Comments

Popular posts from this blog

மசாலா கதை

வாசக நாய்கள்