வாசக நாய்கள்
வாசக நாய்கள்
"சரி டா.. அஞ்சு மணிக்கு பாக்கலாம்!" என்று தொலைபேசியை வைத்தார் திரு. இது தினமும் நிகழும் ஒரு தொலைபேசி உரையாடல். மணியுடன் பேசவில்லை என்றால் திருவுக்கு அந்த நாள் ஓடாது. தன் பணி ஓய்வு வாழ்க்கையில் இதை ஒரு தினசரி சடங்காகவே வைத்திருந்தார் திரு, தன் மனைவியின் படத்திற்கு மாலை சூடுவதைப் போல. அவருக்கு இருக்கும் ஒரே துணை ரோஜர். தினமும் மாமிசம் சாப்பிடவேண்டும். வேறு எதையும் உடம்பு ஒத்துக்கொள்ளாது. இந்த இரண்டு ஜீவன்களுக்கும் சமைத்து பரிமாறுவது விமலாவின் வேலை. விமலாவை வேலைக்கு பரிந்துரைத்தது மணி தான். தன் நண்பனுக்கு உணவு சமைப்பதில் பரிமாறுவதில் உதவியாக ஒருவர் இருந்தே ஆகவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று, தன் வீட்டில் வேலை செய்த விமலாவை வேண்டிக் கேட்டுக் கொண்டு திரு வீட்டிலும் சமைக்க ஒப்புக்கொள்ள வைத்தார்.
மணி வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் திரு ரோஜரயும் கூட்டிக்கொண்டு செல்வார். ரோஜருக்கு கெவின் என்றால் ஒரு தனி பிரியம் தான். கிட்டதட்ட மணியையும் திருவையும் போல தான் ரோஜரும் கெவினும்.. இருவரும் சந்திக்கும் பொழுது, ஒரே தட்டில் தான் சாப்பிடுவார்கள்.. கடைசியில் இருக்கும் ஒரு எலும்புத்துண்டையும் இருவரும் பகிர்ந்து உண்பார்கள்.. அவ்வளவு அன்யோன்யம். ரோஜர் திருவின் வீட்டு கதவருகே செல்லும் பொழுதே குழுஉக்குறி போன்ற சத்தம் இடுவான். அது கெவினுக்கு மட்டுமே புரியும். உடனே கெவின் எங்கிருந்தாலும் வேகமாக கதவருகே ஓடி வந்து, ரோஜரை வரவேற்பான். விமலா வந்து கதவை திறக்கும் வரை கூட அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. அந்த இரும்புக் கம்பிக் கதவு இடுக்குகளில் தலையை நுழைக்க முற்பட்டு ஒருவரையொருவர் நாவில் சுவைத்து அன்பை வெளிப்படுத்துவார்கள். சில நாட்கள், கதவை திறந்தது கூட தெரியாமல் அப்படியே இருப்பார்கள். திரு அந்த லெதர் பெல்ட்டை இழுத்து, வீட்டிற்குள் இழுத்து செல்வார். உள்ளே சென்றவுடன் திருவுக்கு முதல் வேலை, அந்த பெல்ட்டை கழற்றி ரோஜரை விடுவிப்பது தான். இல்லையென்றால் கெவின் குரைப்பதை நிறுத்த மாட்டான் என்று அவருக்கு நன்றாகவே தெரியும்.
அன்று விமலாவின் மட்டன் சுக்கா என்று தெரிந்து தான் திரு சென்றிருந்தார். மணியும் திருவும் உணவுப் பிரியர்கள். மட்டன் எலும்புகளை கடிப்பது திருவுக்கும் மணிக்கும் கூட மிகவும் பிடித்த வேலை. குறிப்பாக மட்டன் வாங்கும் பொழுதே நல்லி எலும்புகள் குறைந்தது 10 துண்டுகள் இருக்க வேண்டும் என்ற கண்டிப்புடன் தான் விமலாவை வாங்கி வரச் சொல்வார். அந்த பீச் ரோட்டில் உள்ள கடைகளில் பெரும்பாலும் இருப்பது மீன் மற்றும் கருவாட்டு கடைகள் தான். அந்த ரோட்டில் வாகனங்களில் அல்லது கார்களில் செல்பவரை தலையை சாய்த்து திரும்பிப் பார்க்க வைப்பது அந்த ஒரே ஒரு மட்டன் கடை தான். ஆம் வரிசையாக இருபது முப்பது மீன் கடைகளை பார்த்து பிறகு ஒரு கடையில் மட்டும் திடீரென்று ஒரு ஆடு தலைகீழாக தோல் இன்றி தொங்கிக்கொண்டு இருந்தாள் யார் தான் வியப்பின்றி பார்க்க முடியும். அதுவும் காதர் கடை என்று கொட்டை எழுத்தில் மிகப்பெரிய போர்டை வைத்து இருப்பார் காதர். மட்டன் கொழுப்புகள் கறி எலும்புகளோடு குறிப்பாக பத்து நல்லிகளையும் வைத்து அன்று கொடுத்திருந்தார் காதர்.
விமலாவின் கைவண்ணம் திருவையும் மணியையும் வழக்கம்போல் மெய்மறக்கச் செய்தது. ரோஜரும் கெவினும் சத்தமிட்டு கொண்டே எலும்புகளை கடிக்க முற்பட்டுக் கொண்டிருந்தனர். சத்தம் அதிகமானது. மணிக்கு சந்தேகம் வந்தது. ஆம், கெவினின் சத்தம் அதிகமாவதை உணர்ந்தார். உடனே விமலாவை கத்தி கூப்பிட்டு, கெவினை பார்க்கச் சொன்னார். கெவின் கழுத்து முழுதும் வெண்ணிறதில் இருந்து சிவப்பு நிறத்தில் மாறி இருந்தது. தாடையின் ஓரத்தில் இரத்தம் தொடர்ந்து வழிந்தது. ஒரு கூறிய எலும்பு குத்தி சொருகி இருந்தது. ரோஜர் என்ன செய்வது என்று தெரியாமல் விமலாவின் சேலையை கவ்விக்கொண்டு இருந்தது. மணி வேகமாக ஃபர்ஸ்ட் எயிட் பெட்டியை எடுத்து, பஞ்சினை ஹைட்ரஜன் பெராக்ஸைடு தொட்டு துடைக்க ஆரம்பித்தார்.
இரண்டு மாதங்கள் கழித்து, விமலா தோட்டத்தை பெருக்கும் பொது அந்த தோட்ட விளக்கமாரில் பறந்து வந்து ஒட்டியது அந்த இரத்தம் தோய்ந்த சிவப்பான பஞ்சு. அன்றுதான் மீண்டும் திருவும் ரோஜரும் மாலை வீட்டுக்கு வருகிறார்கள் என்று வீடு சுத்தம் செய்யப்பட்டது. கெவினுக்கு அந்த இரத்தக் காயத்தால் தொற்று பரவாமல் இருக்க யாரையும் வீட்டில் அனுமதிக்கவில்லை, ரோஜர் உட்பட. மணியும் கெவினும் மாலை பீச் ரோட்டில் வாக்கிங் சென்று, பாதி வழியில் திருவையும் ரோஜரயும் சந்தித்து அழைத்து வருவது திட்டம். காயம் இருந்ததால், லெதர் கழுத்துபட்டையை மாற்றி ஒரு மிருதுவான பட்டையை கெவினுக்கு மாட்டி இருந்தார் மணி.
முதல் தெருவில் இருக்கும் இவர்கள் வீட்டில் இருந்து நடை தொடங்கியது. மணியும் கெவினும் பல நாள் கழித்து வெளியில் வருவதால், எல்லாம் மாறி இருந்தது. பீச் ரோடு அடைந்தவுடன் ஒரு அசாதாரண சூழல் தென்பட்டது. காதர் கடை மூடி இருந்தது. பிளாட்பாரத்தில் ஓரத்தில் நடந்து கொண்டே, இரண்டாவது தெருவை அடைந்தனர். தூரத்தில் கூட்டம் தென்பட்டது. ஆங்காங்கே சிறு சிறு குழுக்கள். மூன்றாவது தெருவை அடைந்தனர். மூன்றாவது தெருவை கடக்கும் முற்படும் பொழுது, வரிசையாக ஆட்டோக்களும் மோட்டார் பைக்குகளும் வந்தன. நின்று நிதானமாக மணியும் கவினும் தெருவை கடந்தனர். மெதுவாக நடந்து நான்காவது தெருவையும் அடைந்தனர். கெவின் தலையை நிமிர்ந்து மணியை பார்த்தான். கெவின் மணியை பார்த்து தலையை வருடி மெதுவாக நடையை தொடர்ந்தார். தூரத்திலிருந்து பார்க்கும் பொழுதே, 5 வது தெருவில் அதிகக் கூட்டம் தென்பட்டது. அனைவரும் இளவயது மாணவர்கள் போல தோன்றியது. ஐந்தாவது தெருவை எட்டியவுடன் தெருவை கடக்க காத்திருந்தனர் மணியும் கெவினும்.. மாணவர் கூட்டம் குறையவில்லை.. தொடர்ந்து வண்டிகள் வர ஆரம்பித்தது.. கெவினுக்கு ஒரு வித பயம் ஏற்ப்பட்டது. திடீரென்று ஒரு சத்தம்.. "மணி..." மணி கூட்டத்தில் சத்தம் வரும் இடம் நோக்கி தேடினார். தெருவின் எதிர்ப்புறம் திருவும் ரோஜரும்.. கூட்டத்தின் இடுக்கில் ரோஜர் கண்ணில் சிக்கினான் கெவின். ரோஜர் தனக்கே உரிய மகிழ்ச்சியுடன் குரைத்தான்.. இந்த பரிட்சயமான சத்தத்தை உணர்ந்து கெவின் மகிழ்ச்சியடைந்து, சுற்றி சுற்றி பார்த்தான்.. அந்த குரைத்தல் மட்டும் தொடர்ந்து கேட்டுகொண்டே இருந்தது..
கெவினுக்கு மகிழ்ச்சி குறைந்து பதற்றம் மிகுந்தது. ரோஜர் மகிழ்ச்சி அதிகமானது. கூட்ட நெரிசல் அதிகமானது. ரோஜரின் காட்சியில் இருந்து கெவின் மறைந்தான். ரோஜர் இடம் பதற்றம் தொற்றியது. குரைக்கும் ஒலிகள் குறையவே இல்லை.
காவல் துறையினர் பிளாட்பாரத்தில் மக்களை விலகிச் செல்லும்படி அறிவுறுத்தினர். மக்களின் கோஷ சத்தங்களும் அதிகமானது. சில காவல்துறை அதிகாரிகள் தனது லத்தியை எடுத்து மேலே உயரத்தில் நீட்டி, நின்று கொண்டிருந்த மக்களை வீடுகளுக்குச் செல்லும் படி மிகுந்த கோபத்துடன் கத்தினார். திரு நின்ற இடத்திலிருந்தே கத்தி "மணி.. நீ வீட்டுக்கு போ.. நம்ப ஃபோன் ல பேசிக்கலாம்.." என்றார்.. கூட்டத்தின் சத்தத்தில் சரியாக கேட்கவில்லை.. "சரி டா.. நீயும் பாத்து போ டா" என்றவாறு திருவும் திரும்பினார். சந்திக்காத கண்கள் நீர்த்தன.. சிறிது தூரத்தில் குரைக்கும் சத்தங்களும் நீர்த்தன.

Comments
Post a Comment